வேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை!

இந்தியா சற்றுமுன்
narendra-singh-tomar
narendra-singh-tomar

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளன. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பி உள்ளன. விவசாயிகளைத் திரட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றன. 

shivrajsing-chowgan
shivrajsing-chowgan

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் செய்தியாளர்களிடம் வேளாண் மசோதாக்கள் குறித்துக் கூறியபோது… 

‘விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 மசோதாக்களையும் எதிர்க்கும் கட்சிகள் விவசாயிகளுக்கு விரோதமானவையே! விவசாயிகளைப் பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் இடைத்தரகர்களை அவர்கள் பாதுகாக்கிறார்கள்.

இந்த 3 மசோதாக்களின் நோக்கமும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தொலைநோக்கு எண்ணத்தோடு பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளார். விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட அம்சங்கள். நிச்சயமாக விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். இந்த மசோதாக்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் விவசாயிகளின் நலனை விரும்பாதவர்களே.  அவர்கள் பிரச்சினையைத் திசை திருப்புகிறார்கள். கோதுமை, அரிசி ஆகியவற்றை விவசாயிகளிடம் எந்த ஏற்றுமதியாளராவது நல்ல விலை கொடுத்து நேரடியாகக் கொள்முதல் செய்தால், அங்கு இடைத்தரகருக்கு இடமேயில்லை. பின்னர் எதற்காக இடைத்தரகர்களுக்காக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள்.

எதிர்க்கட்சியினர் அனைவரும் பிரதமர் மோடியை எதிர்க்கவில்லை. ஆனால், கண்களை மூடிக்கொண்டு விவசாயிகளின் நலன்களைத்தான் எதிர்க்கிறார்கள்” என்றார் சிவராஜ் சிங் சௌஹான்.

அரசியல் காரணங்களுக்காகவே வேளாண் மசோதாக்கள் எதிர்க்கப்படுவதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறிய போது, வேளாண் மசோதாக்கள் மூலம், விவசாயிகளின் வருவாய் பெருகும். 50 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, விவசாயிகளின் வருவாயைப் பெருக்க தவறிவிட்டது. ஆனால், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் மத்திய அரசின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. 

விளைபொருட்களுக்கான விலையை பெரும்பாலும் இடைத்தரகர்கள்தான் நிர்ணயிக்கின்றனர். இந்தச் சட்டத்தின் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும்

தங்கள் விளை பொருட்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம்! குறைந்தபட்ச ஆதரவு விலை, சட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை! அது மத்திய அரசின் நிர்வாக ரீதியிலான முடிவு, அந்த நடைமுறை தொடரும் என்று உறுதி அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.