கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மறுவாழ்வு! மத்திய அரசு வெளியிட்ட நடைமுறைகள்!

Published:

ministry of child and women empowerment
ministry of child and women empowerment

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, மறுவாழ்வு அமைத்துத் தருவதற்கான நடைமுறைகள் குறித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா 2ஆம் அலை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், குழந்தைகள் பலர் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்கள் ஆகியுள்ளனர். இந்தக் குழந்தைகளைத் தத்து எடுக்க முன்வருமாறு, செய்திகள், விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இது போன்ற செய்திகள் சட்டவிரோதம் ஆனவை. இதனால் குழந்தைகள் கடத்தப்படுவதற்கான அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அல்லது செய்திகளைப் பகிர்ந்து ஊக்குவிப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பெற்றோரை இழந்து நிராதரவாக விடப்படும் குழந்தைளுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதற்கான சட்டபூர்வ நடைமுறைகள் அடங்கிய பொது அறிவிப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பெற்றோரை இழந்த குழந்தையை பயண நேரத்தை தவிர்த்து 24 மணி நேரத்திற்குள் மாவட்ட குழந்தைகள் நலக் குழு (CWC) முன் ஆஜர்படுத்த வேண்டும்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

குழந்தையின் உடனடித் தேவையை குழந்தைகள் நலக் குழு கண்டறிந்து, குழந்தைளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து தகுந்த உத்தரவுகளை அனுப்ப வேண்டும்.

குழந்தையை பராமரிப்பாளர்களிடம் ஒப்படைப்பது அல்லது நிறுவனம் அல்லது நிறுவனம் சார்ந்த பராமரிப்பு மையத்தில் தங்க வைப்பது குறித்த முடிவுகளை குழந்தைகள் நலக் குழு எடுக்க வேண்டும்.

சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, குழந்தைகளை அவர்களின் குடும்பத்திலும் சமூகச் சூழலிலும் முடிந்தவரை தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும். அவர்களின் சுற்றுப்புறங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

குழந்தைகள் அவர்களின் உறவினர்கள் யாரிடமாவது ஒப்படைக்கப்பட்டாலும் குழந்தைகள் நலக் குழு தொடர்ந்து குழந்தையின் நலனை கண்காணிக்கும்.

குழந்தையின் அடையாளத்தை பாதுகாக்க, தேவையற்ற துன்பங்களைத் தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும்…

இவ்வாறு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img