கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது; தொடருமா கைது வேட்டை?!

Published:

புது தில்லி:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் தில்லியில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க தனி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இவரது கைதைத் தொடர்ந்து முறைகேடு விவகாரத்தில் சிக்கிய கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடையவர்கள் கைதாவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முந்தைய ஐ.மு. கூட்டணி ஆட்சியின்போது 2007இல் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய ஒப்புதல் பெறப்பட்டதில் முறைகேட்டில் ஈடுபட்டார் கார்த்தி சிதம்பரம் என்று புகார் கூறப்பட்டது. அப்போது நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் கார்த்தியின் தந்தை ப.சிதம்பரம். அவர் தனது தந்தை பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டது.

இதுகுறித்து அமலாக்கத்துறை சட்ட விரோத பணி பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணைக்கு நேற்று முன்தினம் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் நேற்று தில்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார்.

பாஸ்கர ராமனை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தாங்கள் பாஸ்கரராமனை விசாரணைக்கு அழைத்தபோது, விசாரணைக்கு பாஸ்கர ராமன் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்றும் கூறி, அவரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இதை அடுத்து, 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தார் தனி நீதிமன்ற நீதிபதி சுனில் ரானா. இதன் பின்னர் அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, கார்த்தி சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பதும், அவர் நீதிமன்றத்துக்குச் சென்று தடை ஆணை பெறுவதும் வாடிக்கை ஆகிவிட்டதாகக் கூறுகின்றார்கள் அதிகாரிகள்.

இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு உதவியவர்களை வளைத்து அதன் மூலம் வலுவாக ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img