
ஆந்திரம் மாநிலம் சித்தூர் அருகே காகிதத் தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் மற்றம் நண்பர் என 3 பேர் பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் ரங்காச்சாரி தெருவில் காகிதத் தகடுகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார் பாஸ்கர். இரண்டு தளங்கள் கொண்ட இந்த தொழிற்சாலையின் இரண்டாவது தளத்தில், உரிமையாளர் பாஸ்கர்(65), அவரது மகன் தில்லி பாபு(35) மற்றும் அவரது நண்பர் பாலாஜி(25) என 3 பேர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
இதற்கிடையே தீயணைப்பு வாகனங்கள் உரிய நேரத்தில் வராததால் தீ மேலும் பரவத் தொடங்கியடைய அடுத்து, அருகில் இருந்தவர்கள் வீட்டின் சுவர்களை உடைத்து உள்ளே மயக்க நிலையில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் 3 பேரும் இறந்துவிட்டனர் என தெரிவித்தனர்.
தீ விபத்தில் ஆலையி இரண்டாவது தளத்தில் தங்கியிருந்த உரிமையாளர், அவரது மகன் மற்றும் அவரது நண்பர் 3 பேரும் தீயில் கருகி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் இறந்த தில்லி பாபு தனது பிறந்த நாளையொட்டி தனது நண்பருடன் தந்தையுடன் இருந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.