புது தில்லி: புது தில்லியில் காங்கிரஸ் கட்சி இயங்கிவரும் அலுவலகத்தை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 1978-ம் ஆண்டு முதல் தில்லியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான அக்பர் ரோடில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக உரிமத்தைப் புதுப்பித்துக் கொண்டு வந்து, இதுவரை கட்சி அலுவலகம் இயங்கி வந்தது. ஆனால், தற்போது நகர வளர்ச்சித் துறை சார்பில் அந்தக் கட்டடத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகம், சேவா தள கட்டடம், இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் மற்றும் தில்லி சாணக்கியாபுரி பகுதியில் உள்ள பங்களா ஆகிய கட்டங்களையும் காலி செய்து தருமாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2013 ஜூன் 26 ஆம் தேதியுடன் அக்பர் ரோடில் உள்ள கட்டடத்தை பயன்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. எனவே, தற்போது வரை அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தியதற்கான உரிமக் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டும் எனவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த நோட்டீஸ் குறித்து விரைவில் பதில் அனுப்பவுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் ஓரா தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக ஐ.மு.கூ. ஆட்சியி்ன் போது ரவுஸ் அவென்யூ பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. கட்சித் தலைவர் சோனியா காந்தி புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இருப்பினும் கட்சித் தலைமையகம் தொடர்ந்து அக்பர் ரோடிலேயே இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
தில்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காலி செய்ய நோட்டீஸ்
Published:

