புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று மேற்கொண்ட அருணாசலப் பிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான வடகிழக்குப் பகுதி மாநிலமான அருணாசலப் பிரதேசத்துக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்றும், அது திபெத் என்றும் அந்நாடு வரைபடம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்துக்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். அங்கு தில்லிக்கான ரயில் சேவையைத் தொடங்கி வைத்துப் பேசிய மோடி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக, அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த பில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 28 ஆண்டுகளாகக் கண்டிராத வளர்ச்சியை அருணாச்சலப் பிரதேச மாநிலம் அடுத்த 5 ஆண்டுகளில் காணும் என்றார். பிரதமர் மோடியின் இந்தப் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இது இருதரப்பு உறவுக்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ளது. மேலும் “அருணாச்சலப் பிரதேசம் என்று அழைப்பதை சீன அரசு ஒருபோதும் அங்கீகரிக்காது” என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜப்பான், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறியதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. “இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தாயார். ஆனால் அருணாசலப் பிரதேசத்தில் அல்ல… ஆனால் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றே ஜப்பான் பார்க்கிறது” என்று ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் கிஷிடா கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு சீனா கண்டனம் தெரிவித்து, ஜப்பானை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா எதிர்ப்பு
Published:

