2023 – 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ள நிலையில், வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது சற்று இறக்கம் கண்டு 6 – 6-8 சதவிகிதம் வரையே வளர்ச்சி காணும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாகவே இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் செவ்வாய் கிழமை தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், 2023 – 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2022 ஜனவரி – நவம்பர் வரையி 30.5 சதவிகித சராசரி வளர்ச்சி கண்டிருந்தது.
2023ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மத்திய அரசின் மூலதன செலவு 63.4 சதவிகிதம் அதிகரிக்கும். 2022ஆம் நிதியாண்டில் வளர்ச்சி கண்ட ஏற்றுமதி வணிகம், 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் கூடுதலாக சீரான வளர்ச்சியை அடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.