
தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து அண்மையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
ஜார்கண்ட் மாநில புதிய ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து அவர் சென்னையில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒட்டுமொத்த தமிழகத்தின் மீது வைத்து உள்ள பாசத்துக்கு தந்துள்ள பெருமைக்குரிய பரிசாக இதை பார்க்கிறேன். ஜார்கண்ட்- தமிழகம் இடையே பாலமாக இருக்க பதவி ஏற்றபின் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்வேன்’ என்றார்.

தொடர்ந்து ராஞ்சி சென்றடைந்த சி.பி.ராதாகிருஷ்ணனை, அம்மாநில முதல்வர் ஹேமந்த்சோரன் வரவேற்றார். ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்,மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஞ்சி வந்து சேர்ந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.

ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி அபரேஷ் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவருக்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பூங்கொத்து அளித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகப் பதவியேற்ற மரியாதைக்குரிய சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மாநிலத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் உங்களின் வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார்.