ஐ.பி.எல் 2023 – 17ஆம் நாள் – 16.04.2023
முனைவர் கு.வை. பாலசுப்ரமணியன்
ஐ.பி.எல் 2023 தொடரின் 17ஆம் நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடந்தது.
கொல்கொத்தா vs மும்பை
கொல்கொத்தா அணியை (185/6, வெங்கடேஷ் ஐயர் 104, ரசல் 21, ஷர்துல் 18, ராணா 13, ஹ்ருதிக் ஷௌகீன் 2/34) மும்பை அணி (186/5, இஷான் கிஷன் 58, சூர்யகுமார் யாதவ் 43, திலக் வர்மா 30, டிம் டேவிட் 24, ரோஹித் சர்மா 20, சுயேஷ் 2/27 ) 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் விளையாடியது. தொடக்க வீரர்களாக என். ஜெகதீசன், ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் களமிறங்கினர். ஜெகதீசன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, குர்பாஸ் 8 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் நிலைத்து நிற்க, கேப்டன் நிதிஷ் ராணா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் ஷர்துல் தாக்குர், வெங்கடேஷ் ஐயருக்கு தோள் கொடுத்தார். மறுமுனையில், வெங்கடேஷ் ஐயர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 9 சிக்ஸர்களையும், 6 போர்களையும் அடித்தார். அவர் 49 பந்துகளில் சதம் பதிவு செய்து அசத்தினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கா 15 ஆண்டுகளுக்கு பிறகு சதம் விளாசிய ஒரே வீரர் வெங்கடேஷ் ஐயர்தான். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை குவித்தது.
120 பந்துகளில் 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. பீல்டிங்கில் விளையாடாத ரோகித் சர்மா, இம்பேக்ட் பிளேயர் லிஸ்ட்டில் இருந்தார். அதனால் அவர் பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் புகுந்தார். இஷான் கிஷன் அவருடன் களமிறங்கினார். இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். எனினும், ரோகித் சர்மா 2 சிக்ஸர், 1 பவுண்டரி உள்பட 13 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இஷான் கிஷனும், சூர்யகுமாரும் சிறப்பாக விளையாடினார்.
இஷான் 25 பந்துகளில் 58 ரன்கள் (5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட) எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரரான திலக் வர்மா 30 ரன்களில் நடையைக் கட்டினார். அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 43 ரன்களில் ஷர்துல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், நெஹலும் ஆட்டமிழக்க கேமரூன் கிரீன் வந்தார். முடிவில் 17.4 ஓவர்களில் மும்பை அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கொல்கத்தாவிற்கு இது 3வது தோல்வியாகும். கொல்கத்தா சார்பில் சுயாஷ் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
ஆட்ட நாயகனாக வெங்கடேஷ் ஐயர் அறிவிக்கப்பட்டார்.
குஜராத் vs ராஜஸ்தான்
குஜராத் அணியை (177/7, கில் 45, மில்லர் 46, ஹார்திக் 28, அபிநவ் 27, சாய் சுதர்ஷன் 20, சந்தீப் ஷர்மா 2/25) ராஜஸ்தான் அணி (19.2 ஓவரில் 179/7, சஞ்சு சாம்சன் 60, ஹெட்மேயர் 56*, படிக்கல் 26, துருவ் 18, அஷ்வின் 10, ஷமி 3/25, ரஷீத் கான் 2/46) மூன்று விக்கட் வித்தாயசத்தில் வென்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர் சாஹா முதல் ஓவரில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சுப்மன் கில் (34 பந்துகளில் 45 ரன்), சாய் சுதர்ஷன் (19 பந்துகளில் 20 ரன்), ஹார்திக் (19 பந்துகளில் 28 ரன்), டேவிட் மில்லர் (30 பந்துகளில் 46 ரன்), அபினவ் மனோகர் (13 பந்துகளில் 27 ரன்) என தொடர்ந்து அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடினர். அதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 177 ரன் எடுத்தது.
அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி பவர்ப்ளேயான முதல் ஆறு ஓவர் முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 26 ரன் மட்டுமே எடுத்திருந்தது.
இருப்பினும் தேவதத் படிக்கல் (25 பந்துகளில் 26 ரன்), சஞ்சு சாம்சன் (32 பந்துகளில் 60 ரன்) ஹெட்மேயர் (ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 56 ரன்) துருவ் (10 பந்துகளில் 18 ரன்) அஷ்வின் (மூன்று பந்துகளில் 10 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 19.2 ஓவரிலேயே 179 ரன் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றிகண்டது.
ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 56 ரன் அடித்த ராஜஸ்தான் வீரர் ஷிம்ரோன் ஹெட்மேயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.