புது தில்லி: நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அஃப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியுள்ளது. இதன்மூலம் அக்கட்சி மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எட்டு எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட ஓர் அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில்… அஃப்சல் குருவைத் தூக்கிலிட்டது நீதியின் தவறு. அவரைத் தூக்கிலிட்டதில் அரசமைப்புச் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அஃப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எங்கள் கட்சி ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று சுயேச்சை எம்எல்ஏ ரஷீத் அகமது, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் 2011இல் கொண்டுவந்த தீர்மானம் நியாயமானது. அதை பேரவை அப்போதே நிறைவேற்றியிருக்க வேண்டும் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஒமர் அப்துல்லா தனது வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மக்கள் ஜனநாயகக் கட்சியின் இந்தக் கோரிக்கையானது, மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமேலவைத் தேர்தலில் சுயேச்சை எம்எல்ஏ ரஷீதின் வாக்கை விலைக்கு வாங்க நடைபெறும் கொடிய முயற்சியாகும்’ என்று கூறியுள்ளார். முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்ற முஃப்தி முகமது சயீது செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநிலத்தில் அமைதியான முறையில் பேரவைத் தேர்தல் நடைபெற்றதற்கு பாகிஸ்தானும், பயங்கரவாத அமைப்புகளும் அளித்த ஒத்துழைப்பே காரணம்” என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.
அஃப்சல் குரு உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்: பிடிபி.,யின் அடுத்த சர்ச்சை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari