சென்னை…கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உயர்நிலைக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பொருளாதார அறிஞருமான ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
இக் குழு மாநிலத்தின் நிதி நிலைமைகளை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க வழங்கும் ஆலோசனைகளை வரும் 3 மாதத்தில் அறிக்கையாக தாக்கல் செய்து அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 47 நாள்களாக கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மாநிலத்தின் நிதி நிலைமை முடங்கிவிட்டது. ஏராளமான தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். 2 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
மேலும் மாநிலத்தின் நிதி ஆதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்த பாதிப்புகளை எவ்வாறு சரி செய்யலாம் என அரசுக்கு யோசனை கூற இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.