பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் பங்கேற்றதாக போதை தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்யன் கானுடன் சேர்ந்து 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். பின்னர் போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
நடிகர் ஷாருக்கான் மகன் போதை வழக்கில் கைது செய்யப்பட்ட தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பைஜூஸ் கல்வி நிறுவனம், நடிகர் ஷாருக்கான் நடித்த தமது விளம்பரங்களை நிறுத்தியுள்ளது.
2017-ம் ஆண்டிலிருந்து ஷாருக்கான் பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். இதனால் ஆண்டுதோறும் இந்த நிறுவனம் 4 கோடி ரூபாய் ஷாருக்கானுக்குக் கொடுத்து வருகிறது.
தற்போது அவரது விளம்பரங்களை பைஜூஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள மற்ற விளம்பரங்களையும் அந்தந்த நிறுவனங்கள் நிறுத்தக்கூடுமோ என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.