நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்! துபையில் இருந்து உடல் மும்பை கொண்டு வரப் படுகிறது!

இந்தியா சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபையில் சனிக்கிழமை இரவு காலமானார். துபையில் வைத்து அவர் காலமானதாக தகவல் வெளியானது.

54 வயதாகும் நடிகை ஸ்ரீ தேவி துபையில் ஒரு திருமண நிகழ்வுக்காகச் சென்ற போது மாரடைப்பால் காலமானதாகக் கூறப் படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர். தேசிய அளவில் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஸ்ரீதேவியின் சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி. தனது 4 வயதிலேயே திரைத் துறையில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தவர். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருகப் பெருமானின் கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழில் கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அப்போது அவருக்கு வயது 14. அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். மூத்த நடிகர்களான சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுடனும், சக கமல், ரஜினி போன்ற இளம் வயது நடிகர்களுடனும் நடித்து, பிரபலம் அடைந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தியின் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர். 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றவர் ஸ்ரீதேவி.

தமிழ்த் திரைப் படங்களில் மட்டுமல்லாது, ஹிந்தி படங்களில் நடித்து தேசிய அளவில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி, பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ் மற்றும் அண்மைக் காலத்தில் புலி தமிழ்ப் படத்திலும் நடித்தார். அண்மையில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப் படுகிறது.

நடிகை ஸ்ரீ தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பலரும் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா, திரிஷா, தமிழ் நடிகர்கள் நகுல், சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் பலர் தொடர்ந்து டுவிட்டரில் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

மும்பையில் தன் மகள் மற்றும் கணவர் போனிகபூருடன் வசித்து வந்தார். இந்நிலையில் துபைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர், அங்கே மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறியுள்ளனர். ஸ்ரீதேவியின் உடல் துபையில் இருந்து மும்பை கொண்டு வரப் படுவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.