பெங்களூரில் பயங்கரம்! லோக் ஆயுக்த நீதிபதிக்கு கத்திக் குத்து! ஒருவர் கைது!

Published:

பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தில், லோக் ஆயுக்த நீதிபதி விஸ்வநாத ஷெட்டியை அவரது அலுவலகத்தில் வைத்தே கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகத்தில் இந்தச் சம்பவம் இன்று மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

பெங்களூரில் லோக் ஆயுக்த அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்துள்ளார் தேஜாஸ் சர்மா என்பவர். இவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நீதிபதி விஸ்வநாத ஷெட்டியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்துள்ளார் நீதிபதி. திடீரென நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள், உடனடியாக ஓடிச் சென்று தேஜாஸ் சர்மாவை கைது செய்தனர்.

பலத்த காயமடைந்த நீதிபதி விஸ்வநாத ஷெட்டி, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப் பட்டது. அவர் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனிடையே இந்தச் சம்பவம், கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்தச் சம்பவத்துக்கு முதல்வர் சித்தராமையாவே பொறுப்பு என்று குற்றம் சாட்டப் பட்டது. பாஜக.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார், இதுகுறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார். இந்நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் சித்தராமையா, சிகிச்சை பெற்று வரும் நீதிபதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அனந்த குமார், இது மாநில அரசின் தோல்வியைக் காட்டுவதாகக் கூறினார். இந்தச் சம்பவத்துக்கு சித்தராமையாவும், காங்கிரசுமே முழுப் பொறுப்பு. அவர்கள் கர்நாடகத்தில் இருந்து வெளியேறும் நேரம் வந்துவிட்டது. நீதிபதியைக் கொலை செய்யும் அளவுக்கு ஒருவர் இயங்கியிருப்பது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

ஆனால் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், லோக் ஆயுக்தா நீதிபதியை யார் வேண்டுமானாலும் எளிதாக அணுக முடியும். அங்கே செல்ல யாருக்கும் எந்த தடையில்லை. தங்களது குறைகளை சொல்ல யார் வேண்டுமானாலும் அவரை அணுகலாம். அங்கு ஆயுதமேந்திய பாதுகாவலர் இல்லை. அங்கு பல ரகசிய கேமராக்கள் உள்ளன. மெட்டல் டிடெக்டர் உள்ளன. போலீசார் பலர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால், பாதுகாப்பில் குறைபாடு உள்ளது எனக் கூற முடியாது என்று கூறினார்.

இருப்பினும், இன்று இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கர்நாடக அரசியலில் வாத பிரதிவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img