ஆக்ரா: உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் முன் நின்றபடி செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற 3 கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி பலியாயினர். தில்லியை அடுத்த மொராதாபாத், பரீதாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து குடியரசு தின விடுமுறையையொட்டி தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்காக கல்லூரி மாணவர்கள் யாகூப், இக்பால், அப்சல் ஆகியோர் சென்றனர். மதுரா அருகே கோசிகாலா என்ற இடத்தில் ரயில்வே லைனில் ஓடும் ரயிலின் முன்பாக நின்று கொண்டு செல்ஃபி படம் எடுக்க விரும்பியுள்ளனர். அப்போது, காலை 9.30 மணி அளவில் 3 பேர் மீதும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கோசி போலீசார் கூறுகையில், 4 இளைஞர்கள் ஓடும் ரயிலின் முன்பாக நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். இதில் 3 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர். அனீஸ் என்ற வாலிபர் உயிர் தப்பினார் என்று தெரிவித்தனர்.

