செல்போன் சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம்

aadhar - 2026

செல்போன் சிம் கார்டு வாங்க, இனி ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை கூறியுள்ளது.

ஆதார் என்ற அடையாள அட்டை அமல்படுத்தப்பட்ட பின்னர், அதுவே அனைத்து வித சேவைகளுக்குமான அடையாள ஆவணமாக கருதப்படுகிறது. பல வித சேவைகளுக்கும் ஆதார் ஓர் அடையாளச் சான்றாக ஏற்கப்படுகிறது. இருப்பினும் சில சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை சமூக ஆர்வலர்கள், பயனாளிகளுக்கு பல விதங்களில் வசதிக் குறைவையும் பாதுகாப்புக் குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது.

அவற்றில் ஒன்றாக, ஒருவர் செல்போன் இணைப்பு, சிம் கார்டு பெறப்படும் போது, ஆதாரையும் கட்டாயம் அளிக்க வேண்டும் என்றும்,  ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொல்லை தந்தன.

இந்நிலையில் தற்போது சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வேறு அடையாள அட்டையை சான்றாக வைத்தும் இனி சிம் கார்டு வாங்கலாம் என்று மத்திய தொலை தொடர்புத் துறை கூறியுள்ளது.

அந்த விதத்தில், அரசின் சார்பில் வழங்கப் படும் அடையாள ஆவணச் சான்றுகளான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றைக் கொண்டும் இனி சிம் கார்டு வாங்க முடியும். ஆதார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப் பட்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் பயன்படுத்தப் படலாமே தவிர, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் ஏன் தனிநபர் அடையாளத்தை அளிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாக இருப்பதால், தனிநபர் அடையாளச் சான்றான ஆதாரை வைத்து தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக ஏர்டெல் விவகாரத்தில், வாடிக்கையாளருக்கே தெரியாமல், வங்கிக் கணக்குகளில் முறைகேடு செய்தது தொடர்பில் இந்தப் பிரச்னை பெரிதாக வெடித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.