இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் சூட்ட தேவையில்லை: மத்திய அரசு பதில்

இந்தியா

புதுதில்லி:

இந்தியாவுக்கு, ‘பாரத்’ என்ற பெயரை சூட்ட வேண்டும் எனக்கூறி, நிரஞ்ஜன் பட்வால் என்ற சமூக ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

இந்திய அரசு சட்டம் 1935-ஐ ரத்து செய்து இந்திய சுதந்திர சட்டம் 1947-ஐ அமல்படுத்தியதும், நமது நாட்டுக்கு ‘இண்டியா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்திய நாட்டுக்கு ‘பாரத்’, ‘இந்துஸ்தான்’, ‘இந்த்’ அல்லது ‘பரத்வருஷ்’ என்பது போலத்தான் பெயரிடப்பட வேண்டும் என்பது இந்திய அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையாக இருந்தது. எனவே, தற்போது சூட்டப்பட்டு உள்ள ‘இண்டியா’ என்ற பெயருக்கு பதிலாக, மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு பெயரையே இந்திய நாட்டின் பெயராக பயன்படுத்த வேண்டும். அரசு மற்றும் ஆட்சி பணிகளுக்காக ‘இண்டியா’ என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்துமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள் மட்டுமல்லாது, அரசு சாராத நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இந்திய நாட்டுக்கு ‘பாரத்’ என்ற பெயரையே உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு, கடந்த ஏப்ரல் 25-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த பொதுநல மனு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றுவதற்கான சூழ்நிலை எதுவும் தற்போது நிலவவில்லை. இதுபோன்ற கோரிக்கைகள் தேவையற்ற ஒன்று. எனவே இது தள்ளுபடி செய்யப்பட வேண்டியதாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.