திருவனந்தபுரம்: கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது, மாநில வனத்துறை அமைச்சர் ராஜு, ஜெர்மனி சென்றிருப்பது, கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாடு திரும்பியதும் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜு வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடக்கும் சர்வதேச மலையாளிகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மன் சென்றார்.
ஆனால், கேரளத்தில் கடும் மழை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மாநிலமே ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை அமைச்சர் ஜெர்மனிக்கு சென்றது கட்சி மேலிடத்திலும் மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அவர் தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, உடனடியாக கேரளம் திரும்ப முடிவு செய்திருப்பதாக அவரது தனிச் செயலர் தெரிவித்தார்.
இருப்பினும், அவர் கேரளம் திரும்பியதும், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, முதல்வர் பிணரயி விஜயனும் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், கேரளம் அசாதாரணமான சூழ்நிலையில் இருந்ததால் அவர் தன் பயணத் திட்டத்தை ஒத்திவைத்தார்.




