மாநிலங்களவை கூட்டத் தொடரை ஏப்.23ஆம் தேதி கூட்ட முடிவு

புது தில்லி: மாநிலங்களவை கூட்டத் தொடரை வரும் 23ஆம் தேதி கூட்டுவது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு முடிவு செய்தது. தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சி.சி.பி.ஏ.) கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கௌடா, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் அனந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பான அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாநிலங்களவையை வரும் 23ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடத்துவதற்கு பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பட்ஜெட் கூட்டத் தொடரில், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும், தனது 2ஆவது அமர்வில் 13 நாள்கள் அலுவல்கள் கொண்டதாக இருக்கும். மே மாதம் 1ஆம் தேதி மே தினமும், மே மாதம் 4ஆம் தேதி புத்த பூர்ணிமாவும் வருவதால், அந்த இரு நாள்களும், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளுக்கும் விடுமுறை தினங்களாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.