‘நிர்பயா’ குற்றவாளி சிறுவனை விடுவிப்பதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புது தில்லி:
நிர்பயா வழக்கில் குற்றவாளியான சிறுவனை விடுவிப்பதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிர்பயா வழக்கில் குற்றவாளியான சிறுவனின் விடுதலை தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விடுதலைக்குப் பிறகு சிறுவனை எப்படி கண்காணிப்பது என்பது குறித்து மத்திய அரசிடம் திட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்கள் தாக்கல் செய்த இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது.

நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சிறுவனின் தண்டனைக் காலம் வரும் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.