பஞ்சாப் சோகம்… பற்றி எரிந்த ராவண பொம்மை! 61 பேர் உயிரிழப்பால் நெருக்கடியில் காங்கிரஸ்!

Published:

Amritsar Punjab Train Accident - 2026

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதாபதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பஞ்சாப் உள்ளாட்சித்துறை அமைச்சரும் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவியுமான நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

தசரா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அதைக் காண சுமார் 600 பேர் அந்த மைதானத்தில் திரண்டனர். கூட்டத்தால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையால் ரயில் தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் பலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கம் ஹவுராவுக்குச் செல்லும் ரயில் கடந்து சென்றது. அந்த ரயில் மைதானம் அமைந்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவு என்பதால் சற்று மெதுவாகத்தான் கடந்து சென்றது. ஆனால் அது கடந்த 30 நொடிகளில் எதிர் திசையில் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக அடுத்துள்ள பாதையில் வந்துள்ளது.

தசரா கொண்டாட்டத்துக்காக பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்தன. அந்த சத்தத்தால், ரயில்கள் வரும் சத்தம் எவருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் ஆர்வ மிகுதியால் அங்கேயே நின்றிருந்தனர். மேலும் சிலர் செல்போனில் படம் பிடிப்பதில் ஆர்வத்துடன் இருந்ததால், வேறு கவனம் அவர்களுக்கு இல்லாமலிருந்தது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

ரயில்கள் நெருக்கமாக வந்து கடந்த போதுதான் ரயில் வரும் உணர்வே அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் குறைந்த அவகாசமே இருந்ததால், ரயில் பாதையில் இருந்து தப்பிக்க வழி இன்றி, கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் மீது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. அந்த நொடியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சிலர் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். பலருக்கு கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், தன் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். விபத்து காரணமாக அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் அந்த இடத்தைப் பார்வையிடச் சென்ற மாநில கல்வி அமைச்சர் ஓ.பி.சோனியை மக்கள் தாக்கியுள்ளனர். இதனிடையே, இந்த விபத்து குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

ரயில் தண்டவாளம் அருகே உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.

இந்த விபத்து தொடர்பாக ஆளும் காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளன. ரயில்வே தண்டவாளம் அருகே தசரா விழா நடத்த அனுமதி அளித்த அரசுதான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், விபத்து நடந்ததும் சிறப்பு விருந்தினர் நவ்ஜோத் கவுர் அந்த இடத்தை விட்டுச் சென்றது தவறு என்றும் குற்றம் சாட்டப் படுகிறது.

நடந்த சம்பவத்திற்கு மாநில அரசு தான் பொறுப்பு என்று மத்திய அமைச்சரும் அகாலி தள தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.

இப்போது இந்த ரயில் விபத்து பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது. கூடவே அரசியல் ரீதியில் விமர்சனமும் முன் வைக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img