சிபிஐ., இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்: கட்டாய விடுப்பில் அலோக் வர்மா

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

cbi director nageswarara rao e1540362266942 - 2026

சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு. சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இடையே மோதல் நிலவிவரும் நிலையில் இணை இயக்குநர் நியமனம் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.

குஜராத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம், வங்கி மோசடி தொடர்பான புகாரில் சிக்கியதையடுத்து ராகேஷ் அஸ்தானா மீது புகார் எழுந்தது. அவரை சிபிஐ இணை இயக்குனராக நியமிக்க தொடக்கத்தில் இருந்தே அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த மோதல் குரேஷி வழக்கில் உச்சக் கட்டத்தை எட்டியது.

ராகேஷ் அஸ்தானாவுக்கு இறைச்சி ஏற்றுமதியாளர் மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப் பட்டது. லஞ்ச பணத்தை கைமாற்றியதாக அண்மையில் மனோஜ் பிரசாத் என்ற தரகர் அண்மையில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார். இதை அடுத்து ராகேஷ் குமார் மற்றும் சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது வழக்கு பதியப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேவேந்திர குமாரும் கைதானார்.

இதனிடையே, லஞ்ச வழக்கில் தம்மை கைது செய்ய தடை விதிக்கக் கோரி ராகேஷ் அஸ்தானா தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை அடுத்து ராகேஷை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அந்த வழக்கு அக்.29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதலுடன் சிபிஐ இணை இயக்குனரான ஐபிஎஸ் அதிகாரி நாகேஸ்வர ராவ், சிபிஐ இயக்குனரின் பொறுப்புகளை கவனிப்பார் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டது. இந்த நியமன உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த ஆணைக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டது.

மேலும், அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வர்மா மனுத்தாக்கல் செய்ததாகவும், அலோக் வர்மா மனுவை வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.