ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு தொடர்பான வழக்கில், அந்நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ராமலிங்க ராஜு உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை இன்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், அவர்களுக்கான தண்டனை குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் திருத்தம் செய்து, முறைகேடாக நிறுவன லாபத்தை மிகைப்படுத்திக் காட்டி முதலீட்டாளர்கள், பங்குதாரர்களை ஏமாற்றியதாக 2009 ஜனவரி 7ஆம் தேதி அப்போதைய சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜு ஒருகட்டத்தில் தாமாக முன்வந்து தெரிவித்தார். இதையடுத்து ராஜு உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கி 6 ஆண்டுகளில் 226 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 3,000க்கும் மேற்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து மார்ச் 9-ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என நீதிபதி பி.வி.எல்.என். சக்ரவர்த்தி கடந்த டிசம்பரில் அறிவித்தார். பின்னர் ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் உள்ள ராமலிங்க ராஜு உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜு உட்பட 10 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari