விபத்துக்கு முந்தைய நாளில் நேதாஜி என்ன செய்தார்: இணையதளம் வெளியிட்ட தகவல்

லண்டன்:

விமான விபத்தில் சிக்குவதற்கு முந்தைய நாளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ன செய்து கொண்டிருந்தார், அவரது பயணம் என்ன என்பது பற்றிய ஆவணங்களை இங்கிலாந்து இணையதளம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்த, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18ல் தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆயினும் அதை நேதாஜி ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். இதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், விமான விபத்தை சந்திப்பதற்கு முந்தைய நாளில் அதாவது ஆக.17ம் தேதி, நேதாஜி மேற்கொண்ட பயணம் குறித்த ஆவணங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த இணையதளத்தை நேதாஜியின் உறவினர் ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.

விமான விபத்துக்கு முந்தைய நாள், நேதாஜி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து புறப்பட்டு, வியட்நாமில் உள்ள சியாகூன் சென்றார். அதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஏற்று ஜப்பான் சரண் அடைந்திருந்தது. இருப்பினும் திட்டமிட்டபடி நேதாஜி ஜப்பான் செல்வதற்கு நேரடி விமானம் கிடைக்கவில்லை. எனவே, ஜப்பான் அதிகாரிகளுக்கும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்கும் தொடர்பாளராக இருந்த ஜெனரல் இசோடா, தைவான் வழியாக ஜப்பானுக்குச் செல்லும் ஒரு விமானத்தில் இரண்டு இருக்கைகள் மட்டும் இருப்பதாக நேதாஜியிடம் தெரிவித்தார். இதன்மூலம், நேதாஜியின் பெரும்பாலான ஆலோசகர்களும், அதிகாரிகளும் அவருடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளும்படி, நேதாஜிக்கு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து அவரும் ஏற்றுக்கொண்டு, தன்னுடன் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஹபிப் உர் ரகுமானையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால், விமானத்தில் அளவுக்கு அதிகமான சுமை இருப்பதாக ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, நேதாஜி தனது புத்தகங்கள் மற்றும் ஆடைகளில் ஒரு பகுதியை அங்கேயே விட்டுச் சென்றார்.

அதே விமானத்தில், ரஷ்ய விவகாரங்களை கவனிக்கும் ஜப்பானிய ராணுவ அதிகாரி ஷிதேயும் இருந்தார். அவர் சீனாவில் உள்ள மஞ்சூரியாவுக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் நேதாஜியும் மஞ்சூரியாவுக்கு செல்ல வேண்டும் என்று அவருடைய ஆலோசகர்கள் யோசனை தெரிவித்தனர். அதை நேதாஜியும் ஏற்றுக்கொண்டார்.

விமானம் புறப்படத் தாமதமாகி விட்டதால், திட்டமிட்டபடி தைவானுக்குச் செல்வதற்கு பதிலாக, வழியில் வியட்நாமில் உள்ள டூரன் நகரில் விமானம் தரை இறக்கப்பட்டது. அங்கு ஜப்பானிய அதிகாரிகள், விமானத்தின் சுமையைக் குறைக்கும் விதமாக, விமான எதிர்ப்பு எந்திர துப்பாக்கிகள், வெடி பொருட்கள் உள்பட 600 கிலோ எடைகொண்ட பொருட்களைக் கீழே இறக்கினர். அன்றைய இரவில், டூரன் நகரில் உள்ள ஓட்டல் மோரினில் நேதாஜி தங்கினார். – என்று அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்களில், நேதாஜி மர்மம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஷாநவாஸ் கான் கமிட்டி முன்னர், நேதாஜியின் சுதந்திர இந்திய தற்காலிக அரசு, இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அளித்த சாட்சியங்களும் இடம்பெற்றுள்ளன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.