புதுதில்லி:
மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுரை வழங்கினார்.
ஆசிரியர் தினத்தையொட்டி, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:
ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான கல்வி முறைதான் சீரிய சமுதாயம் அமைவதற்கு அடிப்படை ஆகும். ஊக்கம் நிறைந்த ஆசிரியர்கள்தான் சிறந்த கல்வி முறையை உருவாக்குகிறார்கள். அத்தகைய ஆசிரியர்கள் தனி மனித விருப்பங்களை, சமூக மற்றும் தேசிய லட்சியங்களாக மாற்றுகின்றனர்.
மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் நவீன தொழில்நுட்பங்களையும், புதிய வழிமுறைகளையும் ஆசிரியர்கள் கையாள வேண்டும் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பிரதமர் மோடி ஆசிரியர்தினத்தில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
ஜி-20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆசிரியர் தினத்தையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ஆசிரியர்கள் தங்களுக்கு எவ்வாறு ஊக்கமளித்தனர் என்பதை சுருக்கமாகக் குறிப்பிடுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.



