பிற நாடுகளில் காணப்படுவதைப் போல், இந்தியாவில் உள்நாட்டு பயங்கரவாதம் குறிப்பிட்டத்தக்க அளவு தலைதூக்கவில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆசிரியர் தினச் சொற்பொழிவில் கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் முகர்ஜி முன்னர் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான திங்கள்கிழமை (செப். 5), நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதயா வித்யாலயா பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களிடையே பிரணாப் முகர்ஜி “சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
அப்போது அவர் பேசியது…
இந்தியாவிலும், அண்டை நாடுகளிலும் கவலையை ஏற்படுத்தக்கூடிய பல அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. எனினும், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை அவை பாதிக்கவில்லை. மதச்சார்பின்மை என்பது இந்தியர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட பல்வேறு வகையிலான பயங்கரவாதங்களால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிற நாடுகளில் காணப்படுவதைப் போல் உள்நாட்டிலேயே உருவான பயங்கரவாதம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குத் தலைதூக்காமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கொள்கை மற்றும் நிர்வாகத் திறன் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. இந்தியர்களிடையே பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், உணவுகள் என்று ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. எனினும் நாம் அனைவரும் ஒரே அரசமைப்பின் கீழ் ஒன்றுபட்டுள்ளோம். இந்தப் பண்பு, உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
சுதந்திரத்துக்குப் பின் நாட்டில் மாநிலங்களை உருவாக்கியது, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாகும். தேசப் பிரிவினையின்போது தங்கள் வீடுகளை விட்டு துரத்தியடிக்கப்பட்ட மக்கள் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகினர். இதன் காரணமாக மதங்களுக்கிடையே விரோத உணர்வு ஏற்பட்டது. எனினும், இந்தப் பிரச்னை பெரிதாக வெடிக்காமல் நமது அரசியல் தலைவர்கள் பார்த்துக்கொண்டனர்.
இவ்வளவு பெரிய நாட்டில் ஜனநாயக முறையை வெற்றிகரமாக நிலைநாட்டியதன் மூலம் இந்தியா தனது அரசியல் உறுதியை நிலைநாட்டியுள்ளது.
தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, வேட்பாளர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளள்ளது. இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று மிகப் பெரிய அரசியல்வாதிகள்கூட மூளையைக் கசக்கி யோசிக்க வேண்டிய அளவுக்கு இந்தியாவில் ஜனநாயகம் மிக வலிமையாக உள்ளது என்றார் அவர்.



