தமிழகத்திற்கு காவிரியில் எவ்வளவு தண்ணீரை திறந்துவிட முடியும் என கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 193 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு தண்ணீரை விடுவிக்கவில்லை.
இதை தொடர்ந்து, சம்பா சாகுபடியை காப்பாற்ற, காவிரி நீரை பெற்றுத் தர கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரியில் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்நாடகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாரிமன், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலவில்லை என கூறினார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி பிரச்சனையில், வழக்கை கர்நாடகம் மனிதாபிமானத்துடன் அணுகவில்லை என்றார். இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழகத்திற்கு காவிரியில் எவ்வளவு தண்ணீரை திறந்துவிட முடியும் என கேள்வி எழுப்பினர்.
இது குறித்து பதிலளிக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



