நேரடி அரசியலில் களம் இறங்கினார் பிரியங்கா வத்ரா! உ.பி. கிழக்கு பொதுச் செயலராக நியமனம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
priyanka gandhi - 2026

இதுவரை தனது சகோதரருக்காகவும், தாய் சோனியாவுக்காகவும் தேர்தல் பிரசாரம் செய்து வந்த பிரியங்காவை, உத்தர பிரதேச கிழக்கு பிராந்திய பொதுச் செயலராக நியமித்துள்ளார் கட்சித் தலைவர் ராகுல். மேலும், தனது சகோதரி பிரியங்கா ஆற்றல் மிக்கவர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வலுவான பிராந்தியக் கட்சிகளான சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜும் தனியே கூட்டணி அமைத்து, காங்கிரஸை கட் செய்து விட்டன. இதனால் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதியிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், உபி.,யில் காங்கிரஸ் வெற்றிபெற, தனது சகோதரி பிரியங்கா வத்ராவை மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலாளராக நியமித்துள்ளார் ராகுல்.

மேலும், உத்தப் பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிக்கு பொதுச் செயலாளராக ஜோதிராதித்ய சிந்தியாவும், உபி,ம் முழுவதற்கும் பொதுச் செயலாளராக கே.சி.வேணுகோபாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார் பிரியங்கா வத்ரா.

இந்நிலையில், அமேதி நாடாளுமன்ற தொகுதி மக்களை சந்தித்தார் ராகுல். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உபி., அரசியல் களத்தை மாற்ற இளம் தலைவர்கள் தேவைப்படுகின்றனர். பிரியங்காவும் ஜோதிராத்யாவும் இளம் தலைவர்கள். அவர்கள் உபி., அரசியலை மாற்றுவர்/ முழுநேர அரசியலில் ஈடுபட பிரியங்காவுக்கு முழு தகுதி உண்டு. பிரியங்கா நியமனத்தின் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் முன்னேறிச் செல்வோம்! ஒருபோதும் பின்னடவை சந்திக்க மாட்டோம்! உ.பி.,யில் யார் பின்னாலும் காங்கிரஸ் செல்லாது. காங்கிரசின் கொள்கைகளை பிரியங்கா மீண்டும் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார் ராகுல்!

இதனிடையே, பிரியங்கா நியமனத்தின் மூலம், ராகுலின் தோல்வியை காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது என்று உபி., பாஜக., பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா விமர்சித்தார்.
ராகுலின் குடும்ப கம்பெனி எப்படி இயங்கும் என்பதை அனைவரும் அறிந்திருப்பதாக அவர் கூறினார்.

பிரியங்கா நியமனம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தொடக்கத்திலிருந்தே, காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்திடமே இருக்கிறது. எனவே, பிரியங்காவின் நியமனம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்திருக்கிறார்.

பிரியங்கா பிரசாரம் செய்தால் அதிக ஓட்டு கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. அமேதியும், ரே பரேலி தொகுதியும் உ.பி.,யின் கிழக்குப் பகுதியில் தான் வருகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா பொறுப்பேற்றுக் கொள்வார் எனக் கூறப் படுகிறது.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.