ஆம் ஆத்மி கஜேந்திராவைத் தொடர்ந்து மேலும் ஒரு விவசாயி தற்கொலை

delhi-farmer-suicide புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் கூட்டிய பொதுக்கூட்டம் பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி, தில்லி ஜந்தர் மந்தரில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சிறிது நேரத்தில் ஆல்வாரில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார். ஆல்வார் மாவட்டத்தில், புதன்கிழமை இன்று 55 வயது மதிக்கத்தக்க விவசாயி ரய்ல்வே தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆல்வார் – மதுரா ரயில் பாதையில், கண்டெடுக்கப்பட்ட விவசாயி ஹர்ஷ் சுக்வால் உடல் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது, தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் பொலீஸார் விசாரித்து வருகின்றனர். இவரது மகன் போலீஸாரிடம் தெரிவித்தபோது, நேற்று இரவு வயலுக்குச் சென்றவர் வீட்டுக்குத் திரும்பவில்லை என்றும், அவரது உடல் ரயில் தண்டவாளத்தில் கிடந்தது தெரியவந்ததாகவும் கூறியிருக்கிறார். அதேநேரம், மாநிலத்தில் பருவம் தவறிப் பெய்த மழையால், பயிர்கள் பெருமளவு நாசமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மாநிலத்தில் பெரும் மன உளைச்சலில் உள்ளனர் என்று கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் சிவ்குமார் தெரிவித்துள்ளார். எனவே மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.