புது தில்லி: நிலம் கையகப் படுத்தல் மசோதாவுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில், விவசாயி கஜேந்திர சிங் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், விவசாயியின் தற்கொலைக்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே காரணம் என்றும் ஆம் ஆத்மி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால், விவசாயி தற்கொலை குறித்து தகவல் அறிந்தும், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து பேசியதுடன், பேரணியையும் தொடர்ந்து மேற்கொண்டார். ஆனால், ஆம் ஆத்மி தொண்டர்கள்தான் கஜேந்திர சிங்கைத் தூண்டிவிட்டனர் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. இதனால் விவசாயியின் இந்தத் தற்கொலைப் பிரச்னை அரசியலாக்கப்பட்டது. இதனிடையே தில்லி அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரித்து வரும்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில் தில்லி போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீதும் வழக்கு பதிவு செய்ய இருப்பதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, முறையான அனுமதி கேட்டு, துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை அணுகியிருப்பதாகவும், அவர் அனுமதியின் பேரில், கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றும் தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

