5 ஆண்டுகளில் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் செய்தியாளர் சந்திப்பு! ஆனால் பேசியதெல்லாம்…?!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi amitsha - 2026

கடந்த 5 வருடங்களில், பிரதமராக மோடி கலந்து கொண்ட முதல் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தாம் பதிலளிக்காமல், கட்சித் தலைவர் அமித் ஷா பதிலளிப்பார் என்று கூறி, செய்தியாளர்களின் நேரடி கேள்விகளை தவிர்த்துக் கொண்டார்.

17வது மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட பிரசாரம் வெள்ளிக்கிழமை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பிரசாரம் நிறைவடைவதற்கு சில மணி நேரம் முன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். பாஜக., தலைமை அலுவலகத்தில் இந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.

அதே நேரம், யாருமே எதிர்பாராத நிலையில், இந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், கடந்த 5 ஆண்டுகளில் அவர் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால், எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எகிறியது. அமித் ஷா பேரில் செய்தியாளர் சந்திப்பு என்று கூறி அழைக்கப் பட்டிருந்த போதிலும், திடீரென பிரதமர் மோடியும் பங்கேற்றது செய்தியாளர்களுக்கு ஆச்சரியத்தை எழுப்பியது.

இருப்பினும், இந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக தாம் பதிலளிப்பதை பிரதமர் மோடி தவிர்த்தார். நான் ஏன் அவ்வாறு செய்தியாளர்களின் கேள்வியைத் தவிர்க்கிறேன் தெரியுமா? என்று கூறி, அதற்கான காரணத்தையும் விளக்கினார் மோடி.

இந்த செய்தியாளர் சந்திப்பு, கட்சித் தலைவர் அமித் ஷா வின் பெயரில், அவர் நடத்துவதாக திட்டமிடப் பட்டுள்ளது. பாஜக., ஒரு ஒழுக்கமான கட்சி. .இங்கே ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப் படும். எனவே அவர் கூட்டிய செய்தியாளர் சந்திப்பில் அவர்தான் பதிலளிப்பார் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.