பிரதமர் மோதி தேர்தல் பிரசாரம் செய்து வந்த போது, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், பாசனத்துக்காக நீர் வளம், மக்களின் தேவைகளுக்கான குடிநீர் ஆதாரம் இவை குறித்து தனி அமைச்சகம் ஒன்று உருவாக்கப் படும் என்று வாக்களித்தார். அதன்படி, பதவி ஏற்ற முதல் நாளே.. ஜல்சக்தித் துறையை அமைத்து, அதற்கு அமைச்சரையும் நியமித்துள்ளார்.
குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு உயர்தர நீர்ப்பாசன வசதிகள் வழங்குவதை உறுதி செய்வதற்காக ‘ஜல் சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார் மோதி. இதற்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி நேற்று மோதி தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றது. இன்று அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப் பட்டன. அதில், ஜல் சக்தி துறை உருவாக்கப்பட்டு, அந்த துறையின் அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
முந்தைய ஆட்சியில் நீர்வளத்துறையில் இணை அமைச்சராக இருந்தவர் இவர். தற்போது கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர் ஆகியுள்ளார். மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை சீரமைப்புத் துறை ஆகியவற்றை மறுசீரமைத்து இந்தப் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
மே;லும், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையும் இந்தத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது! குறிப்பாக, நதிநீர் இணைப்பு குறித்து விவாதம் களை கட்டியுள்ள இந்நாளில், மத்திய அமைச்சகமாக ஜல் சக்தி என்ற அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




