
அமேதி தொகுதியில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒரு குழுவை அனுப்பி வைக்கிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுல், உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.,வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டு தோல்வியடைந்தார்.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதிகளை மட்டுமே வென்றது.
அமேதி, கேரளத்தின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல், வயநாட்டில் மட்டும் வெற்றிபெற்றார்.
இதனால், காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் உள்ளார்.
ஆனால், அவரது முடிவை மாற்றுக்கொள்ளும்படி காங்கிரஸ் தலைவர்களும், லாலு, ஸ்டாலின், குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேருவின் குடும்பத்திற்கு பாரம்பரியமாக வெற்றியை அளித்து வந்த அமேதியில், ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வி குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக காங்., அகில இந்திய செயலாளர் ஜூபைர் கான் மற்றும் சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதி பொறுப்பாளர் கே.எல்.சர்மா ஆகியோரை நியமித்துள்ளார்.
இந்தக் குழு அமேதிக்கு நேரில் சென்று, தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து எவ்வளவு விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் அறிக்கை தரவேண்டுமென ராகுல் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிகிறது.



