மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் இன்று ஒதுக்கப்பட்டன. முந்தைய அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் இந்த முறை நிதி அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
இந்திரா காந்திக்குப் பிறகு நிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான்! இந்திராகாந்தி 1970-ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது 70-71 வரை ஒரு வருடம் தன்னிடம் நிதித்துறையை வைத்திருந்தார். எனவே பகுதி நேர நிதி அமைச்சகப் பொறுப்பு என்பதை தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், முழு நேர நிதியமைச்சராகப் பதவியேற்ற முதல் பெண் நிர்மலா சீதாராமன் தான்!
கடந்த அமைச்சரவையிலும் இதே போன்ற சாதனையைப் படைத்தார் நிர்மலா சீதாராமன். அப்போதும், பகுதி நேரமாக பல்வேறு அமைச்சகப் பொறுப்புகளுக்கு இடையே ராணுவ அமைச்சகத்தின் பொறுப்பில் இருந்தார் இந்திரா காந்தி. .அதன் பின்னர் முழு நேரமாக இராணுவ அமைச்சராக மட்டுமே பொறுப்பு வகித்த முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார் ராணுவ அமைச்சர் பொறுப்பு ஏற்கும் முன்னர், வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார் நிர்மலா சீதாராமன்.
தற்போது ஹைதராபாத்தில் வசித்தாலும் மதுரையில் பிறந்தவர் நிர்மலா. தமிழகத்தை தாய்வீடாகக் கொண்டவர். 1959-ல் மதுரையில் பிறந்தவர், திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் பயின்றவர். பின்னர் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலையில் முதுநிலை பயின்றவர்.
இவர் பயின்றதும் பொருளாதாரம்தான். எனவே இந்த முறை நிதி அமைச்சகத்துக்கு இவரது பணி தேவைப் பட்டிருக்கிறது.
நிர்மலாவுக்கும் இதே பொருளாதாரத் துறையில் வல்லுநரான பிரபாகருக்கும் கடந்த 1986ல் திருமணம் நடைபெற்றது. 2003-05ல் மகளிர் நல ஆணையத்தில் உறுப்பினராகப் பணியாற்றியபோதுதான் நிர்மலாவை பாஜக.,வில் இணையுமாறு, சுஷ்மா ஸ்வராஜ் வற்புறுத்தியுள்ளார். அதன்படி, 2006ல் இவர் கட்சியில் ஒரு பேச்சாளராக இணைந்தார். பேச்சின் வீச்சால், மிகக் குறுகிய காலத்தில் உயர் இடத்தை அடைந்தார். 2014 -ல் பாஜக., ஆட்சிக்கு வரும் வரை கட்சியின் முக்கியப் பேச்சாளராக இருந்தவரின் ஆளுமைத் திறனை உணர்ந்த கட்சி, இவரை மாநிலங்களவைக்கு தேர்வு செய்து, தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறைக்கு அமைச்சர் ஆக்கியது.
அடுத்து, மிக முக்கியமான வலுவான அமைச்சராக 2017-இல் ராணுவத் துறை அமைச்சர் ஆக்கினார் பிரதமர் மோடி. அவரது கணிப்பு வீண் போகவில்லை. நாடாளுமன்றத்தில், ரபேல் விவகாரத்தைக் கிளப்பிய ராகுல் காந்திக்கு பதில் கொடுக்கும் விதமாக அவர் பேசிய பேச்சு, இன்றளவும் பலருக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அளவுக்கு ஆணித்தரமாகவும், வலுவாகவும், பளிச்சென்றும் பேசி பலரது பாராட்டையும் பெற்றவர்.
தற்போது இதுவரை ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிதி அமைச்சகத்துக்கு வலுவான ஒரு நபராக பொறுப்பேற்று, தாம் இந்திராகாந்திக்குப் பின் ராணுவ அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றது போல், நிதித் துறையிலும் அத்தகைய பெருமையைப் பெற்று சாதித்துள்ளார்.
கடந்த ஆட்சியில், அருண் ஜேட்லியும் பியூஷ் கோயலும் நிதியமைச்சர்களாக இருந்தனர்! இந்த முறை தமக்கு அமைச்சரவைப் பொறுப்பெதுவும் வேண்டாம் என்று அருண் ஜேட்லி கூறிவிட்டார். ஆனாலும், நிர்மலா சீதாராமன் அந்தப் பொறுப்புக்கு தகுதியானவர் என்று பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்தவர் அருண் ஜேட்லி என்ற பேச்சும் தில்லி வட்டாரங்களில் உலா வருகிறது.




