
கோவையில் உள்ள நகர ஊரமைப்புத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் கோப்புகள் எரிக்கப்பட்டது தொடர்பாக, சென்னை அலுவலக துணை இயக்குனர் சேகரன், நேற்று ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார்.
கோவை,ஊழல் கோப்புகள்,தீயிட்டு எரிப்பு, நகர ஊரமைப்பு துறை, துணிகரம், துணை இயக்குனர், விசாரணை
கோவை,நஞ்சப்பா ரோட்டில் உள்ள, மாநகராட்சி வணிக வளாகத்தில், நகர ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் செயல் படுகிறது.
இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், மனை வரன்முறைப் படுத்துதல், கட்டடம் மற்றும் ‘லே-அவுட்’ அனுமதி பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்தாண்டு,திருப்பூர்,
ஈரோட்டை ஒருங்கிணைத்து, திருப்பூரில் நகர ஊரமைப்புத் துறை அலுவலகம் துவக்கப்பட்டது.
இந்த அலுவலகத்திற்கு கோவை மண்டல அலுவலகத்தில் உள்ள பழைய கோப்புகளை அனுப்ப வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், கோவையில் உள்ள அதிகாரிகளே விசாரணை நடத்தி, பழைய தேதியிட்டு, ஒப்புதல் வழங்குவதாக புகார் எழுந்தது.
.இதேபோல், அங்கீகாரமற்ற மனைகளை வரன் முறைப்படுத்த, சதுரடிக்கு, ஏழு ரூபாய் லஞ்சமாக கேட்பதாகவும் புகார் கூறப்பட்டது.
அதாவது, ஒரு சைட்டுக்கு, அங்கீகார கட்டணம் 7,000 ரூபாய் போக, லஞ்சமாக மட்டும், ரூ.10 ஆயிரத்து, 500 கொடுக்க வேண்டியிருப்பதாக, நில உரிமையாளர் கள் சிலர் புகார் கூறினர்.
இந்நிலையில் கோவை மண்டல நகர ஊரமைப்புத்துறை அலுவலகத்தின் பின்புறம், திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த பழைய கோப்புகள், தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளன. மனை வரன்முறைப்படுத்த விண்ணப் பித்தவர்கள் தவித்து நிற்கின்றனர்.
இது குறித்து அலுவலக துணை இயக்குனர் சேகரன் தலைமையிலான அதிகாரிகள் கோவையில் விசாரணை நடத்தினர்.
அப்போது, கோப்புகள் எரிக்கப்பட்டது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள், எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தனர். கோப்புகள் எரிக்கப்பட்ட பகுதியில், அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது அங்கு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சில கோப்புகள், பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனா்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கோவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக, நகர ஊரமைப்புத்துறை ஆணையருக்கும், புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



