புது தில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக ஆஜராகும் பவானி சிங்கை நீக்கக் கோரி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் மனு மீது விசாரணை முடிந்து புதன்கிழை நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதன்படி அன்பழகனின் மனு மீதான 136 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை மூத்த நீதிபதிகள் மதன் பி. லோகுர், ஆர். பானுமதி ஆகியோர் தனித் தனியாக எழுதியிருந்தனர். இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுரின் தீர்ப்பில், “ஆட்சி அதிகாரத்தின் தலையீடு போன்ற காரணங்களால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞரை நியமிக்கும் அதிகாரம் அம்மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, பவானி சிங்கின் நியமனம் தவறானது என்ற அன்பழகனின் முதலாவது கோரிக்கையை ஏற்கிறேன். அதேநேரம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகனின் தரப்பு பதிலை எழுத்து பூர்வமாகத் தாக்கல் செய்ய அவர் விடுத்த மற்றொரு கோரிக்கையை நிராகரிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். நீதிபதி ஆர்.பானுமதி எழுதிய தீர்ப்பில், “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே தனி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அவரது பணி முடிந்ததைக் கர்நாடக அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் சிறப்பு வழக்குரைஞராக ஆஜரானதில் தவறேதும் இல்லை. எனவே, அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரு தீர்ப்புகளும் முரண்பாடாக இருந்ததால் அன்பழகன் மனு தொடர்பாக பின்னர் இரு நீதிபதிகளும் இணைந்து பிறப்பித்த உத்தரவில், “இந்த மனுவை அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்குப் பரிந்துரை செய்கிறோம். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்கு முன்வைக்கும்படி நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடுகிறோம்’ என்று குறிப்பிட்டனர். இதையடுத்து, அன்பழகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா, “இந்த மனுவை வேறு நீதிபதிகள் அமர்வு விசாரித்து முடிக்கும் வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ள தீர்ப்பை வெளியிடக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு நீதிபதி மதன் பி.லோகுர், “அது அந்த நீதிபதியின் முடிவைப் பொருத்தது’ என்றார்.
பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari