தில்லி திரும்பிய ராகுல்; சோனியா- பிரியங்கா ரகசிய ஆலோசனை!

rahul-gandhi-returns புது தில்லி: சுமார் 2 மாத கால நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தில்லி திரும்பினார். அதே நேரம், அவர் தில்லிக்கு வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் சோனியாவும் பிரியங்காவும் ராகுலின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கே இருவரும் ஒரு அறையின் கதவைப் பூட்டிவிட்டு, ரகசியமாகப் பேசியுள்ளனர். யாருக்கும் தெரியாமல் அவர்கள் மிகவும் ரகசியமாகப் பேசியதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுமார் 2 மாத கால நீண்ட விடுப்புக்குப் பின்னர் தலைநகர் தில்லி திரும்பியுள்ளார். விடுப்பில் சென்ற ராகுல் எங்கே சென்றார், எங்கே தங்கியிருந்தார், என்ன செய்தார் என்பது குறித்தெல்லாம் யாருக்கும் தகவல் அளிக்கவில்லை. மிக ரகசியமாக அவரது விடுப்புப் பயணம் வைக்கப்பட்டிருந்தது. வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று நடக்கவிருக்கும் விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசுவார் என கூறப்படுகிறது. ஆனாலும், நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த மிக முக்கியமான கட்டத்தில், அரசியலுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு ராகுல்காந்தி ரகசியமாகச் சென்றது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாம, பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது ரகசியப் பயணம், அவரைக் கேலிக்கு உள்ளாக்கியிருந்தது. இந்நிலையில், ராகுல்காந்தி வீட்டுக்குத் திரும்பியபோது, அவரது தாய் சோனியாவும் சகோதரி பிரியங்காவும் அவரை வரவேற்றுள்ளனர்.