சென்னை: தமிழகத்தில் ஆட்சியாளர்கள் லஞ்ச லாவண்யத்தில் காட்டும் அக்கறையை சுகாதார சீரமைப்பில் காட்ட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கிற சோக சம்பவம் நடந்துள்ளது மிகுந்த வேதனையை தருகிறது. இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நர்சுகள் பணியாளர்கள் இல்லாததோடு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஒரு அவலநிலை அங்கு உள்ளது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏழைஎளிய மக்கள் உயர் சிகிச்சைக்காக இங்குதான் வர வேண்டிய நிலை உள்ளது. ஒரே நாளில் 40 முதல் 70 பிரசவங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன. இந்த பிரசவங்களை செய்வதற்கு உரிய மருத்துவ வசதிகள் அங்கு இல்லாதது மிகுந்த வெட்கக்கேடானது. நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் செயற்கை சுவாச கருவிகள் மருந்துகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற எந்த வசதிகளும் ஏற்படுத்தாதது தான் பச்சிளம் குழந்தைகளின் பரிதாப சாவுக்கு காரணம். இதேபோல பச்சிளம் குழந்தைகளின் இறப்பு சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்ததையொட்டி தமிழக ஆட்சியாளர்கள் உரிய பாடம் கற்றதாகத் தெரியவில்லை. பொதுவாக தமிழ்நாட்டில் ஓரு ஆட்சி நடக்கிறதா என்கிற கேள்விக்குறி நாட்டு மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. அதை விழுப்புரம் பச்சிளம் குழந்தைகளின் பரிதாப சாவு உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள தாய்மார்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளன. கிராமப்புறங்களில் வாழ்கிற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு நுண்ணூட்டச் சத்து வழங்குவதற்காக மத்திய காங்கிரஸ் அரசு தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தை தொடக்கி வைத்தது. இதை உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருக்கிற சுகாதார அமைப்புகள் பாராட்டி வரவேற்றுள்ளன. ஆனால் அந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாமல் உள்ளது. தமிழகத்தில் சுகாதாரத்துறை லஞ்ச லாவண்யத்தில் மூழ்கி சீரழிந்து வருவதால் மருத்துவ மனைகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதில் தமிழக சுகாதாரத்துறை முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. நேற்று தருமபுரி இன்று விழுப்புரம் என அப்பாவி பச்சிளம் குழந்தைகளின் சாவுகள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த சாவுகளுக்கு பொறுப்பேற்காமல் தமிழக அரசு தப்பிக்க முடியாது. மருத்துவ வசதிக்காக வந்த குழந்தைகளின் தாய்மார்கள் இறந்த குழந்தைகளின் சடலங்களை தூக்கிக் கொண்டு தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய குழந்தை சாவுகளுக்கு சம்மந்தப்பட்ட அமைச்சரையும் மருத்துவமனை அதிகாரிகளையும் விரிவான விசாரணைக்கு உட்படுத்துவதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.
லஞ்ச லாவண்யத்தில் காட்டும் அக்கறையை சுகாதாரத்தில் காட்ட வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari