சென்னை: மார்ச் 28 முழு அடைப்புப் போராட்டத்தில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கவும் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் இராசிமணல் ஆகிய இடங்களில் மூன்று அணைகளை கட்டுவதற்கு கருநாடக அரசு முயற்சித்து வருகிறது. அதற்கென நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. இந்த அணைகளைக் கட்டினால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கும். விவசாயம் மட்டுமின்றி குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும். இந்நிலையில், அந்த அணைகளை கட்டவிடாமல் தடுக்கவேண்மென தமிழக மக்கள் உரத்து குரல் எழுப்பி வருகின்றனர். விவசாய சங்கங்களும் அனைத்துக் கட்சியினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்திய அரசு உடனடியாகத் தலையிடவேண்டுமெனவும் கருநாடக அரசின் அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டுமெனவும் கோரிவருகின்றனர். எனினும், இந்திய அரசு தமிழக மக்களின் கோரிக்கையை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளவே இல்லை. மேலும், நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் பங்கீடு ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைக்காமலும் காலம் தாழ்த்திவருகிறது. இந்நிலையில், கடந்த 21.3.2015 அன்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்முயற்சியில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரசு, பாரதிய சனதா, திமுக, தேமுதிக, விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துக்கொண்டனர். அக்கூட்டத்தில், கருநாடக அரசின் அணைக்கட்டும் முயற்சியைத் தடுக்க வலியுறுத்தியும் காவிரி மேலாண்மைவாரியம் நதிநீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும் 28.3.2015 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துவதென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாய அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் வணிகர் அமைப்புகள் எனப் பல்வேறு கட்சி சாராத இயக்கங்களும் இணைந்து அத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. இப்பேராட்டம் இந்திய அரசுக்கு தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும். எனவே, இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் வெகுவாக பங்கேற்கவேண்டுமெனவும் அமைதி வழியிலும் அறவழியிலும் வெற்றிகரமாக நடத்திவேண்டுமெனவும் குறிப்பாக, வணிகர்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள், பயணிகள் உட்பட யாவரும் இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்கால வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை மனதில் நிறுத்தி ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
முழு அடைப்புப் போராட்டம்: அனைத்துத் தரப்பும் ஒத்துழைக்க திருமாவளவன் கோரிக்கை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari