
இந்திய – சீன உறவுகளை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வந்திருந்தனர். இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மிகத் தீவிரமாகச் செய்து வந்தது.
இந்திய பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் மிகச் சிறப்பாக நிறைவடைந்ததை அடுத்து, இதற்காக ஒத்துழைத்து ஏற்பாடுகளைச் செய்த தமிழக அரசுக்கு வெளியுறவுத் துறை அமைச்சரும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான எஸ்.ஜெய்சங்கர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ள கருத்துகள்…
நினைவுகூரத்தக்க இந்திய-சீன உச்சிமாநாடு #ChennaiConnect இனிதே நிறைவுபெற்றது. மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த தமிழக அரசிற்குப் பாராட்டுகள். @CMOTamilNadu அவர்களுக்கு மிக்க நன்றிகள். சீன விருந்தினர்களை வரவேற்கப் பெருந்திரளாக ஆர்வத்துடன் கூடிய தமிழக மக்களுக்கும் நன்றிகள்.
இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக்க அயராது உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எப்போதும் போல வெளியுறவுத்துறை அமைச்சகம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. – என்று குறிப்பிட்டுள்ளார் ஜெய்சங்கர்.



