
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, பாமக., நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அவர்களது வாழ்த்துச் செய்தியில்…
மக்களின் வாழ்வை ஒளியும், மகிழ்வும் நிறைந்ததாக மாற்ற உறுதியேற்போம்!வண்ண ஒளிகளின் விழாவான தீபஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.
தீபஒளித் திருநாளுக்கான மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமானால், அதற்கான அடிப்படைக் கூறுகள் அனைத்தும் வலிமையாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும். குறிப்பாக அனைவருக்கும் உணவு படைக்கும் வேளாண்மைத் தொழிலும், கிராமப்புற பொருளாதாரத்தை வலுவாக்கும் சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்களும் தழைத்தோங்க வேண்டும். அப்போது தான் தீப ஒளி என்பது ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் பண்டிகையாக மட்டும் இல்லாமல், அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கும் திருவிழாவாகவும் திகழும்.
தீபஒளித் திருநாள் மத்தாப்புகளால் ஏற்படுத்தப்படும் வண்ணங்களையும், ஒளிகளையும் மட்டும் கொண்டதாக இருக்கக் கூடாது; மாறாக, மக்களின் வாழ்க்கையில் இல்லாமையை விலக்கி, இன்பத்தைப் பெருக்கி வளமும், நலமும் கொண்டதாக மாற வேண்டும். அத்தகைய ஒளிமயமான இலக்கை நோக்கி உழைக்க நாம் அனைவரும் ஒளிகளின் விழாவான இந்த நன்னாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். – என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள தீப ஒளித் திருநாள் வாழ்த்துச் செய்தியில்…
வண்ணங்களின் திருவிழாவான தீப ஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.
தீப ஒளித் திருநாள் உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திப் பார்ப்பது ஆகும். அந்த மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருக வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். – என்று கூறியுள்ளார்.



