திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர்

  திருவாரூரில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, சட்டப் பேரவையில் எதிர்க் கட்சிகளின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நடந்த விபத்து தொடர்பாக சன்னாநல்லூர் வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், நன்னிலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவன மேலாளர் மற்றும் களப் பொறியாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். மேலும், இந்த விபத்தில் பலியான இருவர் ஒடிசா மாநிலத்தையும், ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலத்தையும் சேர்ந்தவர்கள், இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 16 பேருக்கும், தலா ரூ. 50 ஆயிரம் நிவாராணத் தொகை வழங்கப்படும். என தெரிவித்தார்.