கடலுார்: கடலுார் முதுநகர் தேசிய நெடுஞ்சாலை ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், அடிக்கடி 'டிராபிக் ஜாம்' ஆகி பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடலுார் புதுநகரில் இருந்து முதுநகருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 2015ம் ஆண்டு பெய்த கன மழையினால் கடும் பாதிப்பிற்குள்ளானது. தண்ணீர் ஓட வழியில்லாமல் ஆங்காங்கே சாலை அரிப்பு ஏற்பட்டு பெரும் சேதம் அடைந்தது. சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி அவசியம் என்பதை கடந்த வெள்ளத்தில் பாடம் கற்ற அதிகாரிகள், அவசர அவசியத்தை கருத்தில் கொண்டு கடலுார் முதுநகர் சாலையை 2 கோடி ரூபாய்க்கு 'பேட்ஜ் ஒர்க்' செய்ய டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகள் முடிந்த சில நாட்களிலேயே சாலைகள் மீண்டும் ஜல்லிகள் பெயர்ந்து யானை பிடிக்கும் பள்ளங்களானது.
சிதம்பரம், விருத்தாசலம் மார்க்கத்தில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள், கனரக வாகனங்கள் வந்து செல்வதால் 'பேட்ஜ் ஒர்க்' சாலையால் தாக்குப்பிடிக்க முடியாமல் சாலை சேதம் அடைந்தது. சாலையில் ஏற்படும் பள்ளத்தை நிரப்புவதற்காக 'குவாரி டஸ்ட்' நிரப்பி அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த சாலையை முழுவதுமாக சீரமைக்க 18 கோடி ரூபாய் மதிப்பில் 5 கி.மீ., தார் சாலை, சாலையின் இரு பக்கமும் மழைநீர் வடிகால், 4 சிறிய அளவிலான கல்வெர்ட் பாலங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டது.
அதன்படி கல்வெர்ட் பாலம் கட்டும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அதேப்போல் பச்சையாங்குப்பம் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணி நடைபெற்று வருகிறது. நகருக்குள் வடிகால் பணி நடைபெறவில்லை. காரணம், சாலையின் (பவுண்டரி) எல்லை குறித்து இன்னும் சர்வே செய்யப்படாததால் வடிகால் வாய்க்கால் கட்டுமானப்பணிகள் தாமதமாகி வருகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் கடலுாரில் பெய்த கனமழையால் சாலையின் பள்ளத்தில் போடப்பட்டிருந்த 'குவாரி டஸ்ட்' பவுடர் காற்றிலே பறந்து புழுதி நகரமாக காட்சி தந்தது. இதனால் சாலையோரம் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலைகளில் பல இடங்களில் யானை பிடிக்கும் பள்ளங்கள் உருவானதால் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் ஊர்ந்து செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சர்வே செய்யும் பணிகளை துரித படுத்தி சாலை போடும் பணியை விரைவாக துவங்க வேண்டு ம்.



