மக்களை குழப்பி அரசியல் நாடகம் ஆடும் ஸ்டாலின்: முதல்வர்!

சற்றுமுன் தமிழகம்
cm 1 - 2026

சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது,

மத்திய அரசு 50 வகை காரணிகளை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து தமிழகத்திற்கு சிறந்த ஆளுமை அந்தஸ்தை வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. இதற்கு உதவிய அதிகாரிகள், அரசு ஊழியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்குப்பதிவு மறைமுகமாகவே நடைபெற்றுள்ளது. யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானித்துள்ளனர்.

இதில் பயப்படத் தேவையில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் தேவையின்றி அச்சப்பட்டு நீதிமன்றத்தை நாடுகிறார். அதிமுகவைப் பொறுத்தவரையில் தேர்தல் நடைமுறையில் யாரும் தலையிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்து. ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் நாடகம் ஆடுகிறார்.

தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கின்றன. 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பின்பற்றப்பட்ட வழிமுறைகள் தற்போதும் பின்பற்றப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 2003-ஆம் ஆண்டு மத்திய பாஜக ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது மக்கள் தொகை கணக்கெடுப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியில் 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆட்சியில் அங்கம் வகித்தபோது மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த திமுக இப்போது வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது தேசியக் குடியுரிமை பதிவேடு கிடையாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களை குழப்பி வருகிறார்கள். பொதுமக்களும், இளைஞர்களும், சிறுபான்மையினரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு புதிதாக 900 பேர் புதிதாக மருத்துவப் படிப்பில் சேரும் வகையில் 9 மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும்.

மின் ஊழியர்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடி உள்ளதை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.