புயல் உருவாகுதாம்… மே 16ஆம் தேதிக்குப் பின்!

Published:

imd chennai picture - 2026

மத்திய வங்கக் கடல் பகுதியில் வரும் மே 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது !

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்த செய்திக் குறிப்பில்…

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 15ஆம் தேதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், இது மேலும் வலுப்பெற்று, வரும் 16ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக மையம் கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ., முதல் 65 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும், அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், 15,16, 17, ஆகிய தேதிகளில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img