அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது- ஒரு கண்துடைப்பு: ராமதாஸ்

சென்னை:
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது- தாமதமான தற்காப்பு நடவடிக்கை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான வழக்கில் வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது காலம் கடந்து எடுக்கப்பட்ட கண்துடைப்பு  நடவடிக்கை ஆகும்.
முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்த வேண்டும் & விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக அவரை பதவிநீக்க வேண்டும் என அப்போதே நான்  வலியுறுத்தினேன். ஆனால், முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பான ஆதாரங்களை அழிக்கவும், செய்திகள் வெளிவராமல் தடுக்கவும் தான் அரசு முயன்றதே தவிர, உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒருகட்டத்தில் நிலைமை கைமீறி போனபோது தான் மார்ச் மாதம் 7 ஆம் தேதி அமைச்சர் பதவியிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். அப்போதும் இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்& அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது  செய்து விசாரிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க தமிழக அரசு  மறுத்துவிட்டது.
அதுமட்டுமின்றி, அதிகாரி முத்துக்குமாரசாமியை வருமானவரித்துறை விசாரணைக்கு அழைத்து இருந்ததாகவும், அதற்கு பயந்து கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் ஊடகங்களின் மூலம் காவல்துறை வதந்தி பரப்பியது. மேலும், முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி காரணமில்லை என்று மறுக்கும்படி அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. இந்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாலும், இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்ததாலும் தான் தாங்கள் இவ்வழக்கை நியாயமாக நடத்துவதாகக் காட்டும் நோக்குடன் முன்னாள் அமைச்சரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த நடவடிக்கை ஒரு கண்துடைப்பே தவிர, இதனால் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது. உண்மையில் இது அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உயர்ந்த இடத்தில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சி ஆகும். அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஊழல் மூலம் சேர்த்த பணத்தை அவரே வைத்துக் கொள்ளவில்லை. அனைத்து அமைச்சர்களும் ஊழல் மூலம் ஈட்டும் பணத்தை தங்களின் மேலிடத்தில் ஒப்படைத்து விட்டு அவர்கள் தரும் குறிப்பிட்ட விழுக்காடு கமிஷனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம் என்று அதிமுகவினரே கூறுகின்றனர்.
இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டால்  ஊழல் மூலம் கிருஷ்ணமூர்த்தி சேர்த்த பணம் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்ற உண்மைகள் எல்லாம் தோண்டி எடுக்கப்படும். இதைத் தடுக்கும் நோக்குடன் தான் இப்போது கிருஷ்ணமூர்த்தி கைது என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இது போதுமானதல்ல. இவ்வழக்கில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர சி.பி.ஐ.யால் மட்டுமே முடியும் என்பதால் இவ்வழக்கை அந்த அமைப்பிடம் ஒப்படைக்கவேண்டும்-
என்று கூறியுள்ளார்.