
தமிழக கேரள எல்லைகளில் ஒன்றான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் சுமார் 1000 வாத்துக்கள் மற்றும் வாத்து முட்டைகளை ஏற்றிவந்த வாகனம் கேரளாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
புளியரை சோதனை சாவடியில் பறவைகாய்ச்சல் தடுப்பு பணிக்காக தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினர் கடந்த 90 நாட்களாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர், இந்த நிலையில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களில் கோழி கழிவுகள், முட்டைகள், கோழிகள், காடை, வாத்து போன்றவை இருந்தால் திருப்பி அனுப்பப் படுகின்றன,

அந்த வகையில் 1000 வாத்துக்கள் என்பது சாதாரண விசயம் அல்ல, ஒரு வேளை அந்த வாத்துக்களுக்கு பறவைக் காய்ச்சல் இருந்து இவை தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டால் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது.
எனவே இவை திருநெல்வேலி மண்டல இணை இயக்குனர் மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குனர் கவனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டது. அவர்களின் அறிவுரையின் பேரில் காவல் துறை உதவியுடன் கேரளாவிற்கே திருப்பி அனுப்பியதாக பணியில் இருந்த கால்நடை மருத்துவர் ராஜேஷ் தெரிவித்தார்.