
கோவிலைத் திற.. என்ற முழக்கத்துடன் இன்று தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர், ஆலயங்களை திறக்க வலியுறுத்தி ஒற்றைக் காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு அனுமதி கொடுத்தும் மாநில அரசு கோவில்களை திறக்காததால் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஒற்றைக்கால் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்து முன்னணி அமைப்பினர்.
கொரோனோ நோய்த் தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதை அடுத்து, மார்ச் மாதம் முதல் கோயில்கள், கிறிஸ்துவ சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

பின்னர் தற்போது மத்திய மாநில அரசுகள் சிறு குறு தொழில்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நடைமுறைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் / இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான அனுமதியை மத்திய அரசு ஜூன் 8-ஆம் தேதி முதல் வழங்கியது. இதன்படி திருப்பதி கோயில் உள்ளிட்ட பெரிய கோயில்களும் பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டன.
ஆயினும், தமிழகத்தில், மாநில அரசு கோயில்கள் வழிபாட்டுத் தலங்களை பக்தர்களுக்குத் திறப்பதற்கான எந்த ஒரு அனுமதியையும் தற்போது வரை வழங்கவில்லை.
இதனால் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வாசலில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஒற்றைக் காலில் நின்று கோஷங்களை எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோயில்கள் சம்பந்தமான தொழில்கள் மூடப்படுவதால் உடனடியாக கோயில்களை திறக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வாசலில் இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோயில் வாசலில் குவிக்கப்பட்டனர்.

கோவிலைத்திற.. என்ற முழக்கத்துடன் இன்று தமிழகம் முழுவதும் இந்துமுன்னணி அமைப்பினர் ஆலயங்களை திறக்க வழியுறுத்தி ஒற்றைக் காலில் நின்று பிரார்த்தனை போராட்டம் நடத்தினர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை