‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் திமுக., வசூல் வேட்டை நடத்தியது: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு!

சற்றுமுன் சென்னை
kpramalingam
kpramalingam

ஒன்றிணைவோம் வா – திட்டத்தின் மூலம், திமுக., பயங்கர வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக, திமுக.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள கே.பி.ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக., விவசாய அணியின் செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்தவர்.

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் பெற்ற ஏமாற்றத்தால், கட்சி நடவடிக்கைகளில் இருந்து கே.பி.ராமலிங்கம் அதிக ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கி இருந்ததாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டவேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியபோது, அதுகுறித்து கருத்து தெரிவித்த கே.பி.ராமலிங்கம், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது. எனவே கொரோனோ பரவும் இந்த நேரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் என்பதெல்லாம் தேவையில்லாதது எனக் கூறினார்.

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு ஆமாம் போட்டு ஆதரவு தெரிவிக்காமல், அதற்கு நேர்மாறான கருத்தை கே.பி.ராமலிங்கம் தெரிவித்ததால் திமுக., தலைமை கடும் கோபம் அடைந்தது. உடனே தி.மு.க.வில் இருந்து தூக்கி எறியப் பட்டார் கே.பி.ராமலிங்கம்.

இந்நிலையில் கே.பி.ராமலிங்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். நேற்று மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததற்காக நன்றி தெரிவித்த அவர், குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்து வருவதாக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி. ராமலிங்கம், “ஒன்றிணைவோம் வா” திட்டம் மூலம் திமுக வசூல் வேட்டை நடத்தியுள்ளது என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.