போலீஸார் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாக புகார்! மக்கள் போராட்டம்! வழக்கு பதிவு!

Published:

vkpudur police
vkpudur police

போலீஸ் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி, வழக்கு பதிவு செய்தனர்.

  • தென்காசி – வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த குமரேசனை போலீஸ் தாக்கியதாக புகார்.
  • ஜூன் 12 அன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரேசன் உயிரிழப்பு.
  • தென்காசி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் குமரேசனின் தந்தை ஏற்கெனவே புகார்.
  • குமரேசனின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரின் ஊர் மக்கள் போராட்டம்.
  • இதை அடுத்து போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் என்பவர் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரை கடந்த 15 தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் விசாரிக்க அழைத்துச் சென்று அவரை கண்மூடித்தனமாக அடித்ததால்தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள், வீரகேரளம்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு தொடங்கி அதிகாலை வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அங்கு காவலர்களை அதிகம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தினர். அதன் பின்னர் அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காவல்துறையினரின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஊர்மக்கள் கலைந்து சென்றனர். குமரேசனின் தந்தை நவநீதகிருஷ்ணனிடம் போலீஸார் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

நவநீத கிருஷ்ணன் தமது புகாரில் ‘என் மகன் கடந்த 10ஆம் தேதி ரத்த வாந்தி எடுத்தான். உடனே அவனை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.

என் மகனை 15 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் ஆகியோரால் என் மகன் தாக்கப்பட்டான். அதன் பின்னரே அவனுக்கு உடல் நலம் குன்றியது.

தற்போது அவன் உயிரிழந்துள்ளான். அவனை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் என் மகனின் பிரேத பரிசோதனை நீதிபதி ஒருவர் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இந்நிலையில் இந்த விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்யப் பட்டிருப்பதாக, வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img